|
புதுச்சேரி, ஜனவரி 06: புயல் சேதத்தை மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை புதுச்சேரி மற்றும் கடலூர் நகரங்களுக்கு வருகிறது.
தானே புயல் தாக்குதல் காரணமாக கடலூர், புதுச்சேரி நகரங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. இரு நகரங்களிலும் முழு வீச்சில் நிவாரணப்பணிகள் நடந்து வருகின்றன. எனினும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பல நாளாகும் என்று தெரியவந்துள்ளது.
புதுச்சேரி, கடலூரில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களை மதிப்பிட மத்தியக் குழுவை நேற்று மத்திய அரசு அமைத்தது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தலைமையிலான இந்தக் குழுவில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால் வளம், குடிநீர், நிதி, சுகாதாரம், மின்சாரம், போக்கு வரத்து, ஊரக மேம்பாடு, நீர்வளம் ஆகிய 10 துறைகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் தேசிய பேரிடர் மேலாண்மை, திட்டக்குழு உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவை அனுப்புவது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, "மத்திய அரசின் இணைச் செயலாளர் லோகேஸ்ஜா தலைமையில் தானே புயல் சேதத்தை மதிப்பிட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு நாளை (சனி) அல்லது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி, கடலூருக்கு சென்று புயல் சேதத்தை மதிப்பீடு செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.
|