Tamil Nadu News

உடனே வேலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை, ஜனவரி 24: மக்கள் நலப் பணியாளர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்து கடந்த நவம்பர் மாதம் அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்டதால் கடந்த இரண்டரை மாதங்களாக வறுமையில் வாடிய மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வயிற்றில் இத்தீர்ப்பு பால் வார்த்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பாமக சார்பில் முழுமனதுடன் வரவேற்கிறேன்.

மக்கள் நலப்பணியார்கள் அனைவரும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர்கள். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இவர்களின் பங்கு மகத்தானது. அவ்வாறு இருக்கும்போது திமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களை பணிநீக்கம் செய்தது முறையல்ல.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பை மதித்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்திற்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும்.

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து மாணவர்களின் விலை மதிப்பற்ற நேரத்தை வீணடித்ததைப்போல இந்த வழக்கிலும் செய்யக்கூடாது. அதிமுக அரசின் முடிவுகள் உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றத்தாலும் தொடர்ந்து கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த வழக்கிலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் ஒருமுறை விமர்சனத்திற்குள்ளாக கூடாது. மக்கள் நலப்பணியாளர்களின் குடும்ப சூழ்நிலையும், மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கும்படி தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Jan 24, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More Tamil Nadu News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony