|
நெல்லை, பிப்ரவரி 22: சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி மார்ச் 15ம் தேதி பிரச்சாரம் செய்கிறார்.
இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், "திமுக தலைவர் கருணாநிதி சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 15ம் தேதி சங்கரன்கோவில் வருகிறார். அங்கு வடக்கு ரதவீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். திமுக பொருளாளர் ஸ்டாலின் மார்ச் 12, 13, 14 ஆகிய தேதிகளில் திறந்த வேனில் தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரிக்கிறார். மார்ச் 5,6 தேதிகளில் பொதுச்செயலாளர் அன்பழகன் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
5ம் தேதி இரவு 7 மணிக்கு திருவேங்கடத்திலும், 6ம் தேதி இரவு சங்கரன்கோவில் நகரத்திலும் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மார்ச் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை சங்கரன்கோவில் தொகுதியில் தங்கியிருந்து தொகுதி முழுவதும் தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார்" என்று தெரிவித்தார்.
|